தமிழக அரசின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள சமூகநீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.
தமிழக அரசின் சார்பில் சமூகநீதி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் தலைவராக பேராசிரியர் சுப. வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அக்குழுவின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தனவேல், பேராசிரியர் சுவாமிநாதன், ஏ.ஜெய்சன், பேராசிரியர் ஆர்.ராஜேந்திரன், கோ.கருணாநிதி, கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றான அனைவருக்கும் சம வாய்ப்பு என்கிற சமூகநீதியை முன் நிறுத்துவதிலும் அதனைக் கண்காணிப்பதிலும் இக்குழுவின் செயல்பாடு இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியன் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தனர். அனைவரும் முதல்வருக்கு நினைவுப்பரிசுகளை வழங்கி வாழ்த்துகளைப் பெற்றனர். அக்குழுவின் பணி இன்றிலிருந்து தொடங்கவுள்ள நிலையில் சிறப்பாக செயல்படும்படி முதல்வர் அவர்களை வாழ்த்தியுள்ளார்.
























