துபாயில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இதனையடுத்து கேப்டன் விராட் கோலி மீது கேள்விக்கணைகள் பாய, அவர் கடும் கோபமடைந்து எரிச்சலுடன் பதிலளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்படியே பாகிஸ்தானை நேற்று வெற்றி பெற்றிருந்தாலும் அதோடு தனக்கு உலகம் முடிந்து விடப்போவதில்லை என்று சுருக்கென்று கோபமடைந்து பதில் சொன்னார் விராட் கோலி. பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய டி20 வெற்றியாகும். 13வது முயற்சியில் உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தியிருக்கிறார்கள். ஆனாலும் நிருபர்கள் சும்மா இருப்பார்களா?! பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட்டீர்களா?, அவர்கள் கேம் பற்றி அறிந்திருக்கவில்லையா? என்ற கேள்விக்கணைகள் பிரஸ்மீட்டில் கோலின் மீது பாய்ந்தன. இதனால் எரிச்சலடைந்த கோலி,
“இதோ பாருங்க! எதார்த்தம் ஒன்றாக இருக்கும் போது வெளி உலகில் கருத்துக்கள் வேறு ஒன்றாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். கருத்துகள் கூறுவோர்கள் பேட், பேடு, ஹெல்மெட் சகிதம் , கிரிக்கெட் உடைகள் தரித்து வந்து களத்தில் நின்று ஆடிப்பாருங்கள் தெரியும். பாகிஸ்தான் அணி அவர்களுக்கான நாளில் உலகின் எந்த அணியையும் வெற்றி பெறுவார்கள்.

எதையும் சாதாரணமாக எடைபோடுவதற்காக நாங்கள் களமிறங்கவில்லை. இந்த ஆட்டம் மதிக்கப்பட வேண்டும், இந்த அணி இந்த ஒரு போட்டியை வென்று விட்டோம் அப்பாடா உலகமே நமக்கு இனி தேவையில்லை என்று நினைக்கும் அணியல்ல. கிரிக்கெட் என்பது அனைவருக்கும் அப்பாற்பட்டது. நாங்கள் உண்மையில் ஆட்டத்தைத்தான் மதிக்கிறோம். எந்த அணியையும் லைட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம். அதே போல் எதிரணியினரிடத்தில் உயர்வு தாழ்வு பேதமும் பார்ப்பதில்லை” என்றார் கோலி.
அப்போது ஒரு நிருபர், ”ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு இஷான் கிஷனை எடுப்பீர்களா?” என்று கேட்டார், இதற்கு கோலி, “இது தைரியமான கேள்வி. என்ன நினைக்கிறீங்க சார்? எது சிறந்த அணியோ அதைத்தான் இறக்கினோம். நான் கேட்கிறேன், ‘நீங்கள் ரோஹித் சர்மாவை டி20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ட்ராப் செய்வீர்களா? உங்களுக்கு சர்ச்சைத் தேவைப்பட்டால் சொல்லி விடுங்கள் அதற்குத் தகுந்தாற்போல் பேசுகிறேன். என்ன ஒரு கேள்வி நம்ப முடியவில்லை!

பாகிஸ்தான் அணி எங்களை முழுதும் ஆதிக்கம் செலுத்தியது. எதிரணியினரை தூக்கி அடிக்க வேண்டுமெனில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற வேண்டும். எங்களுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை, போதிய பிரஷர் போட்டோம், ஆனால் அவர்களிடம் அனைத்திற்கும் பதில் இருந்தது. நம்மை விட அவர்கள் நன்றாக ஆடினார்கள் என்பதை ஒப்புக் கொள்வதில் எதற்கு வெட்கம்? அனைத்து போட்டிகளையும் வெல்வோம் என்பதற்கெல்லாம் உத்தரவாதம் இல்லை” என்று விராட் கோலி படபடவென பேசினார்.
























