டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 118 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டிகள் இன்று தொடங்கியுள்ள நிலையில் முதல் போட்டி ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வின் செய்த ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது. டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியின் முதல் ஓவரை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் வீசினார்.தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா 2 பவுண்டரிகள் அடிக்க முதல் ஓவரிலேயே 11 ரன்கள் எடுத்தது தென்னாப்பிரிக்க அணி. இரண்டாவது ஓவரிலேயே பவுமாவை 12 ரன்களில் போல்ட் செய்தார் மேக்ஸ்வெல். பவர்ப்ளேயின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
13 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மார்க்ரமும் மில்லரும் கூட்டணி அமைத்து வெளுத்துக் கொண்டிருந்தார்கள். இனி ஆட்டம் சூடுபிடிக்கும் என்று நினைத்த நிலையில் ஸாம்பா. மில்லரை 16 ரன்களிலும் பிரேடோரியஸை 1 ரன்னிலும் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் கேஷவ் மஹாராஜா ரன் அவுட் ஆனார். 36 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அணியை கொஞ்சம் காப்பாற்றிய மார்க்ரம் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டும் எடுத்தது. பந்துவீசிய 5 ஆஸி. வீரர்களும் குறைந்தபட்சம் 1 விக்கெட் எடுத்தார்கள். ஹேசில்வுட், ஸ்டார்க், ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் மேக்ஸ்வெல், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு இது மிகவும் எளிதான இலக்கு என்பதால் நம்பிக்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
























