ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவுக்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்படும் படமாக ‘கூழாங்கல்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. இத்திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ இத்திரைப்படம் கலையம்சத்தோடு உருவாக்கப்பட்டிருஃப்ப்பதால் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. நெதர்லாந்தில் ரோட்டர்டாம் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு விருதையும் வென்ற முதல் தமிழ் படம் என்கிற சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது. உக்ரைனில் நடக்கும் ‘மோலோடிஸ்ட்’ சர்வதேச திரைப்பட விழா, சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’ உள்ளிட்ட விழாக்களில் திரையிட கூழாங்கல் திரைப்படம் தேர்வானது.

ஆஸ்கர் விருதுக்கு போட்டியிட அனுப்புவதற்காக இந்தியாவில் மொத்தம் 14 படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தமிழ்த்திரைப்படம் மண்டேலா, மலையாளத்திரைப்படம் நயாட்டு, இந்தித் திரைப்படம் ஷெர்னி உள்ளிட்ட படங்களும் இந்தப் பட்டியலில் இருந்தன. கொல்கத்தாவில் நடைபெற்ற திரையிடலில் இந்த 14 படங்களிலிருந்து சிறந்த படமாக கூழாங்கல் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் போட்டியிடவிருக்கிறது.
























