தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.
நியாய விலை கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக ‘கற்பகம்’ என்ற பெயரில் நியாய விலை கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தின் மூலமாக இந்த விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. பல்பொருள் அங்காடிகளில் கரும்பனை எனும் பெயரில் பனைவெல்லத்தை விற்பனை செய்யும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இளம் தலைமுறையினர் எளிதில் இணையதள சேவையினை பயன்படுத்தி தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய பொருட்களை கொள்முதல் செய்திட tnkhadi எனும் மொபைல் அப்ளிகேஷனையும் முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். மேலும், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சாயல்குடியில் 53.50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பனை வெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பனையின் பயன்களைக் கொண்டு மதிப்புக்கூட்டவும், பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் இது போன்ற திட்டங்கள் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
























