விதிகளை மீறி தண்ணீர் திருடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டுமென உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அனைவருக்கும் தண்ணீர் பகிர்ந்தளிப்பதற்கான கொள்கையை வகுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதி மன்றத்தில், ஈரோடு சுற்று வட்டாரப் பகுதியில் பவானி ஆறு மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகியவற்றில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதால், அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும், தமிழக அரசு 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் தண்ணீர் பகிர்ந்தளிக்க உத்தரவிட வேண்டுமெனவும் ஈரோட்டை சேர்ந்த யு.எஸ்.பழனிவேல் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் சட்டவிரோதமாக நீர் எடுக்கப்படுகிறதா என்பதை திடீர் ஆய்வுகள் மூலம் கண்டறிந்து வருவதாகவும், அவ்வாறு எடுக்கப்பட்டால் குழாய்கள் அகற்றப்பட்டு, மின் இணைப்பும் துண்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பிலிருந்து, காளிங்கராயன் வாய்க்கால் நீரேற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் தரப்பில் பாசனப் பரப்பை முறையாக ஒழுங்குமுறைப்படுத்தக் கோரி பல கோரிக்கைகள் வைத்தும் நிறைவேற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஆதாரமாக தண்ணீர் உள்ளது. தண்ணீர் இல்லாமல், அவை உயிர் வாழமுடியாது என்றும், கிடைக்கின்ற தண்ணீரை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் ஒரு தரப்பிற்கு மட்டும் கிடைப்பதாக அமைந்து விடக்கூடாது என வலியுறுத்தி உள்ளார். அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைக்கும் வகையில், பாசனப்பரப்பை முறையாக பதிவுசெய்ய வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டார். விவசாய நிலங்களை விரிவுபடுத்துவதன்மூலம் நாடு பலனடையும் என்றும் தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.
பதிவுசெய்யப்பட்ட பாசன பரப்பில் உள்ள நிலங்களுக்கு முதலில் தண்ணீரை பகிர்ந்தளிக்க வேண்டுமென்பது அரசின் முடிவாக இருப்பதால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். அதேசமயம், திருடுவதற்கு ஏதுவான வளமாக தண்ணீர் இருப்பதால், அதை சட்டவிரோதமாக எடுப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
பொதுப்பணித் துறையும், நீர்வள ஆதாரத் துறையும் தண்ணீரை திருடுபவர்கள்மீது எடுக்கும் நடவடிக்கைகள் மட்டுமில்லாமல், காவல்துறையும் வழக்குப்பதிவு செய்தால்தான் முறையான புகார்கள் வரும் என உத்தரவில் அவர் தெளிவுபடுத்தி உள்ளார். மேலும், எந்த ஒரு தனி மனிதனும் பாதிக்கப்படாத வகையில், அனைவருக்கும் தண்ணீர் பகிர்ந்தளிப்பதற்கான கொள்கைகளை வகுத்து நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
























