‘தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் அதிமுக ஆட்சியில் ரூ 26.17 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் பயன்படுத்தபட்டிருக்கிறது’ என ஆடிட்டர் ஜெனரல் தணிக்கை குழுவின் ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. பொதுக் கணக்கு குழு அமைப்பின் தலைவர் செல்வப்பெருந்தகை தஞ்சாவூரில் ஆய்வு செய்தபோது இதைத் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2021– 22 -ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழு அமைப்பின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான உறுப்பினர்கள் தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள இடம் என மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் நடைபெறும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அண்மையில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து அக்குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“ கடந்த ஆட்சியில் நடந்த தவறுகள், நிர்வாக திறமையின்மை, அரசு பணம் விரயம் உள்ளிட்ட பல தலைப்புகளில், சி.ஏ.ஜி., அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் என்னென்ன தவறுகள் களையப்பட வேண்டும். வரும் காலங்களில் தவறுகள் நடக்காமல் இருப்பது எப்படி? இதற்கு யார் பொறுப்பேற்பது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான அரசு கட்டடங்கள் தரமானதாக இல்லை. தனியார் கட்டித் தரும் அரசு பள்ளி கட்டடம் தனக்காக சொந்தமாக கட்டுவதுபோல் தரமானதாக கட்டித் தந்திருக்கிறார்கள். அது மகிழ்ச்சியைத் தரக்கூடியது. பாராட்டப்பட வேண்டியது. ஆனால் அரசுப் பணத்தை எடுத்துக் கட்டுபவர்கள் தரமாகக் கட்டுவது இல்லை. அந்தப் பள்ளியில் அவர்கள் குழந்தைகள் படிப்பதாக இருந்தால் இப்படித் தரமற்ற முறையில் கட்டுவார்களா?!
நாங்கள் ஒரு பள்ளியில் ஆய்வு செய்ததில் கழிவறை முறையாக இல்லை. தண்ணீர் வசதி இல்லை. புதர் மண்டிக் கிடக்கிறது. விஷப் பூச்சிகள் நடமாட்டம் நிச்சயம் இருக்கும். அந்த இடத்தை எப்படி மாணவர்கள் பயன்படுத்த முடியும்?
கடந்த ஆட்சியில், மருத்துவத்துறையில் காலாவதியான மருந்துகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை, ஆடிட்டர் ஜெனரல் தணிக்கை குழுதான் அதைக் கண்டறிந்திருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள, திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில், காலாவதியான மருந்துகள் விநியோகம் செய்துள்ளதை, ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். 26.17 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். குறிப்பாக 2013 –14-ம் ஆண்டுகளில் இவை நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மருந்துகளைப் பயன்படுத்தியவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கிறதா, உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறதா என்பது கண்டறியப்படுவதுடன் தவறு இழைத்தவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
























