பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்குச் சலுகை காட்டிய சேலம் காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தற்போதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வழக்கிற்காக கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ், பாபு , ஹெரோன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நேற்று நேர் நிறுத்தப்பட்டனர். கடந்த முறை ஆஜரானபோதே சி.பி.ஐ தாக்கல் செய்திருந்த குற்றப் பத்திரிகையின் நகல் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதில் விடுபட்ட நகல்கள், நேற்று ஆஜரானபோது வழங்கப்பட்டது.

வழக்கு விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார், நீதிபதி. இதையடுத்து, அந்த 9 பேரும் மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சென்ற காவல்துறை வாகனம், (TN 30 G 0453) கோவை சித்ரா விமான நிலையம் அருகே நேற்று திடீரென நிறுத்தப்பட்டது.
அங்கு பொள்ளாச்சி பதிவு எண் கொண்ட 8 சொகுசு கார்களில் வந்து அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் காத்திருந்தனர். காவல்துறை வாகனம் அந்த இடத்தை அடைந்ததும், குற்றம் சாட்டப்பட்ட கைதிகளிடம் ஓடி வந்து உறவினர்கள், நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பொள்ளாச்சி வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக கருதப்படும், சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ் ஆகிய 5 பேர் அந்த வாகனத்தில் இருந்தனர். உறவினர்களிடம் அவர்கள் பேசிய பின்னர், அந்த வாகனம் சேலம் மத்திய சிறைக்கு சென்றது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களைச் சந்திக்க வேண்டும் என்றால், முறையாக, நீதிமன்றத்தின் முன்அனுமதியைப் பெறவேண்டும் என்பது விதி.
ஒருவேளை நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும், நீதிமன்ற வளாகத்தில்தான் உறவினர்களையோ நண்பர்களையோ கைதிகள் சந்திக்கமுடியும். நேற்று நீதிமன்ற வளாகத்தில் வைத்தும் அவர்கள் தங்கள் உறவினர்கள் சந்தித்திருக்கின்றனர்.
“நீதிமன்ற வளாகத்தைத் தவிர வெளியிடங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சந்திக்க அனுமதி இல்லை. வாகனத்தை சாப்பிட நிறுத்தினால்கூட, யாரையும் சந்திப்பதற்கு அனுமதி கொடுக்கக்கூடாது. இது பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.” என நேற்றைய இந்தச் சந்திப்பு குறித்துக் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களுக்குச் சிறப்பு சலுகை வழங்கிய சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட 7 காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து சேலம் காவல் ஆணையர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டார்.
























