அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சசிகலா நடராஜன் மீது சென்னை மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று வெளிவந்த சசிகலா, கடந்த 17ம் தேதி அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு தியாகராய நகர், ஆற்காடு தெருவில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்குச் சென்றார். அங்கிருந்த கொடிக்கம்பத்தில் அதிமுக கட்சிக்கொடியை ஏற்றியதோடு, கழக பொதுச்செயலாளர் என அவரது பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார்.
இதனை கண்டித்து அதிமுக கழக அமைப்பு செயலாளர் ஜெயகுமார், கழக சட்ட அலோசனை குழு உறுப்பினர் பாபு முருகவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் அடங்கிய குழு சென்னை மேற்கு மாம்பலம் R1 காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரிடம் சசிகலா மீதான புகாரை அளித்தனர்.
புகாரளித்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்
“சசிகலா நடராஜன் சட்டப்படி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர். அவருக்கும் அதிமுகவுக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ள நிலையில் சட்டத்தை மீறி சசிகலா நடராஜன் திமுகவுடன் இணைந்து அதிமுகவை வீழ்த்த சதி செய்து வருகிறார். சட்டத்துக்கு புறம்பாக அவரது காரில் அதிமுக கொடியுடன் வலம் வருகிறார். ஏதோ சசிகலாதான் அதிமுகவை உருவாக்கியது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். கட்சியின் பொன்விழாவை ஒட்டி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் கொடியேற்றியுள்ள செயல் மாபெரும் கண்டனத்துக்குரியது எனவே அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
























