தலைமைக் கழகச் செயலாளராக மதிமுகவில் பொறுப்பேற்க உள்ள வைகோவின் மகன் துரை வைகோ, வரும் 25-ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார்.
மதிமுக கட்சிக்காரர்கள், துரை வைகோவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அது நிறைவேறியது. துரை வைகோவுக்கு கட்சிப் பதவி வழங்குவது தொடர்பாக நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் எதிராக 2 ஓட்டுகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று நடந்த அந்தக் கூட்டத்தில் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கலந்துகொள்ளாததும் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள துரை வைகோ, வரும் 25-ம் தேதி காலையில் பெரியார், அண்ணா நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்த உள்ளார். அதன் பிறகு கட்சியின் தலைமையகமான தாயகம் சென்று, தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்பை முறைப்படி ஏற்றுக் கொள்வார். அன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளார் துரை வைகோ.
























