இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.
தனுஷ் தற்போது, மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’, செல்வராகவனின் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் நரேனின் மாறன் திரைப்படம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பும் விரைவில் முடியவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து நானே வருவேன் திரைப்படத்தில் தற்போது முழு வீச்சுடன் தனுஷ் நடித்து வருகிறார்.
‘ராட்சசன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப்பிறகு ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன் பிறகு அத்திரைப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. ராட்சசன் திரைப்படம் அதன் நேர்த்தியான திரைக்கதைக்காக கொண்டாடப்பட்டது. விஷ்ணு விஷால் கேரியரிலேயே மிக முக்கியமான படம் என்பதோடு ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற இந்தியப்படமாகவும் இருந்தது. ஆகவே, ராம்குமாரின் அடுத்த படத்துக்கான எதிர்ப்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்நிலையில் தனுஷுடன் இணையும் படத்துக்கு வால் நட்சத்திரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், 2022ம் ஆண்டு மத்தியில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
























