வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு சென்னையைச் சுற்றியுள்ள நீர் நிலைகளான புழல் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
புழல் ஏரியைப் போலவே செம்பரம்பாக்கம் ஏரியும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும் மழை பெய்தாலும் சாலைகளில் நீர் தேங்காத வகையில் வடிகால்களை அமைப்பது உள்ளிட்ட முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் முன்னெச்சரிக்கை பணிகளை முன்னெடுக்க உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதுதான் காரணம். ஏரியின் கொள்ளளவு, நீர் வரத்து ஆகியவற்றை கேட்டறிந்த முதல்வர் தேவையான பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டார். மேலும், செம்பரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறனுடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டினை ஸ்டாலின் பார்வையிட்டார்.
























