வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக புழல் ஏரியை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.
ஏரியின் நீர் இருப்பு, மதகுகளின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர், நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆகாய தாமரையை அகற்றவும், கரையை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். புழல் ஏரியின் மொத்த கொள்ளவான 3.30 டி.எம்.சி.யில் தற்போது 2.77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இந்த ஆய்வில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
























