லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜீவா கதாநாயகனாக நடிக்கும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 18-ம் தேதி முதல் எங்க வீட்டு மீனாட்சி சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றனர். இயக்குநர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா பாக்யராஜ், ஜீவாவின் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அடுகளம் நரேன், பூர்ணிமா பாக்யராஜின் கணவனாகவும், ஜீவாவின் தந்தையாகவும் நடிக்கின்றனர்.
காதலும் மோதலும் நிறைந்த தொடராக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், சீரியலுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சீரியலில் ஜீவாவின் தந்தையாக நடிக்கும் நரேன், சின்னத்திரையில் நடிப்பது குறித்து மனம் திறந்துள்ளார். அதில். ” சின்னத்திரைக்கும், வெள்ளித்திரைக்கும் பெரிய வித்தியாசமில்லை.
அதன் மீடியம் மட்டுமே வித்தியாசமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இரண்டுமே மக்களை மகிழ்விக்கும் துறை தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரையில் நடிக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் ஜீவா, பூர்ணிமா பாக்யராஜ் என பல திரை நட்சத்திரங்கள் இந்த சீரியலில் நடிக்கின்றனர். பூர்ணிமா பாக்யராஜூடன் இணைந்து முதன் முதலாக நடிக்கிறேன்.
கதையின் பிளாஷ்பேக்கில் தான் என்னுடைய போர்ஷன் வருகிறது. மிகச் சிறந்த கதாப்பாத்திரம். இந்தக் குழுவுடன் இணைந்து பணயாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்தடுத்த நாட்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மீண்டும் சின்னத்திரையில் நடிப்பது குறித்து பேசிய அவர், ” நான் என் ஆரம்ப கால நடிப்பு பயணத்தை சின்னத்திரையில் இருந்து தான் தொடங்கினேன். எனக்கு ஏற்கனவே நிறைய வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனால், தேதிகள் முறையாக ஒதுக்க முடியாது என்கிற காரணத்தினால், அந்த சீரியல்களில் நடிக்க முடியாமல்போனது என கூறினார்.

“என்னைப் பொறுத்த வரை திரைப்படங்களில் நடிப்பதைக் காட்டிலும் சீரியலில் நடிப்பது கடினமானது. திரையில் 2 மணி நேரங்களில் உங்களின் நடிப்பு முடிந்துவிடும். ஆனால், சீரியல்களில் ஒவ்வொரு நாளும் உங்களை நீங்கள் நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். அதற்கான உழைப்பை நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும்.
மக்களை ஒவ்வொரு நாளும் திருப்தி அடையச் செய்ய வேண்டும் என்பதால், அந்தளவுக்கு கன்டென்ட் கொடுக்க வேண்டும்” என ஆடுகளம் நரேன் கூறியுள்ளார்.
























