’இந்தி இந்தியாவின் தேசிய மொழி. அதை அனைவரும் கொஞ்சமாவது கற்றிருக்க வேண்டும்’ எனக் கூறிய சொமேட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி ஒருவரின் திமிர்த்தனமான பதில் இன்று இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
மாறிவரும் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இணைய வழியாக உணவுகளை ஆர்டர் செய்து வீட்டுக்கே வரவழைத்துச் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஸ்விக்கி, சொமேட்டோ, ஆகிய இணைய நிறுவனங்கள் நாம் விரும்பும் உணவகங்களில் இருந்து உணவை பெற்று வந்து வீட்டுக்கே டெலிவரி செய்வதில் முன்னணியில் உள்ளன.
இந்நிலையில் விகாஷ் என்ற நபர் தான் சொமேட்டோவில் ஆர்டர் செய்த உணவில் ஒரு பகுதி தனக்கு வந்து சேரவில்லை என்றும், அது குறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டபோது அவர்கள் இந்தியில் பேசியதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் தனது அந்த டிவிட்டர் பதிவில், தனக்கு இந்தி தெரியாது, தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்தவர்களைப் பணி அமர்த்துங்கள் என சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் சொன்னதாகவும் அதற்கு அவர்கள், ’இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்றும், நாட்டு மக்கள் அனைவரும் கொஞ்சமாவது இந்தி கற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டதாகச் சொல்லி, வாடிக்கையாளர் சேவை மையத்துடன் தனக்கு நடந்த அந்த உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்திருந்தார்.

அவரின் இப்பதிவு தற்போது இணையவெளி எங்கு வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ஒன்றியத்தில் ஒருங்கிணைந்து வாழும் பல்வேறு மொழிவழி தேசிய இனங்கள் மீது ஏற்கனவே மத்திய அரசு இந்தித் திணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், சொமேட்டோ போன்ற ஒரு தனியார் நிறுவனமும் அதை அடியொற்றி இந்தித் திணிப்பை மற்ற மொழிவழித் தேசிய இனங்கள் மேல் திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்திய அளவில் தற்போது #Reject_Zomato என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
























