இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங், இந்திய பந்துவீச்சாளர் சாஹலை ஜாதி ரீதியாக விமர்சித்ததால் கைது செய்யப்பட்டு, அவரிடம் போலீஸார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர்.
2020 ஜூன் மாதம் யுவராஜ் சிங் மற்றும் இந்திய வீரர் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் இன்ஸ்டாகிராம் நேரலையில் கலந்துரையாடினர். அப்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை சாதிரீதியாக யுவராஜ் சிங் பேசியதாக கூறப்படுகிறது. சாஹல் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து, யுவராஜ் சிங் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஹரியாணாவில் தலித் அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்தனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் யுவராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டடு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. யுவராஜின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தது, உடனே யுவராஜ்சிங் மன்னிப்பு கேட்டார். ” நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, தவறான வார்த்தையை உபயோகப்படுத்திவிட்டேன். அது தேவையற்றது. எனினும், ஒரு பொறுப்பான இந்தியனாக நான் வேண்டுமென்றே யாருடைய உணர்வுகளையும் உணர்வுகளையும் காயப்படுத்தியிருந்தால் வருத்தத்தை தெரிவிக்க விரும்புகிறேன்” என்று மன்னிப்பு கோரியிருந்தார் யுவராஜ் சிங்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஹரியானா மாநிலம் ஹிசார் போலீசார் யுவராஜ் சிங்கை நேற்று கைது செய்தனர். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக யுவராஜ் ஏற்கனவே மன்னிப்பு கோரியிருந்ததால் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். யுவராஜ் சிங்குக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், நாங்கள் அதை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளோம் என்று வழக்கு தொடர்ந்த ஹரியானா தலித் அமைபினர் தெரிவித்துள்ளனர்.
























