முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். .
விஜயபாஸ்கருக்கு சொந்தமான, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி எட மலைப்பட்டி புதூரில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை நடைபெறுகிறது.
சென்னை சேத்துபேட்டில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை இராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாமானார் சுந்தரம் இல்லத்திலும் சோதனை நடைபெறுகிறது.
விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தனது மனைவி பெயரில் பொருந்தாத வகையில் ரூ. 27.22 கோடிக்கு சொத்து சேர்த்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது, 2013-2021 ஆண்டுகளில் வருமானத்தைவிட அதிகளவு சொத்து குவித்தாக வழக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில், விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பெறப்பட்ட லஞ்சப்பணத்தில் கல்வி நிலையங்களை தொடங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கேசி வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
























