சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘மருதாணி’ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள அண்ணாத்த படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போல கூட்டு குடும்ப கதைப் பின்னணியில் அண்ணாத்த படம் தயாராகி வருகிறது. அண்ணன் – தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு. படத்தின் டீசர் வெளியான பிறகு முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அண்ணாத்த படத்தின் வேறொரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.
டிவிட்டரில் வெளியாகி உள்ள அந்த அப்டேட்டில் ’மருதாணி’ எனத் தொடங்கும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு போஸ்டரில் ஒரு பக்கம் மீனா, மறுபக்கம் குஷ்பு நடுவில் ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ளனர். ’அண்ணாத்த’ படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
























