சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்த சுதாகரன், தண்டனை முடிந்து இன்று விடுதலையானார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் ஜெயலலிதா மட்டும் ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் இருந்த சசிகலா, இளவரசி ஆகியோர், தங்களுக்கு விதிக்கப்பட்ட 10கோடி ரூபாய் அபராதத்தை செலுத்திய பிறகு ஜனவரி 27ம் தேதி விடுதலையாகினர்.
அபராதத்தை கட்ட தவறியதால் சுதாகரனுக்கு மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி கூடுதலாக ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 2007ம் ஆண்டு, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தான் சிறையில் இருந்ததாகவும், அதனை கணக்கில் கொண்டு தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டுமென சுதாகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர் இன்று விடுதலையானார். அவருடைய உறவினர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர் உட்பட பலர் மலர் தூவி அவரை வரவேற்றனர்.
























