இன்று காலை மின்சாரதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தஞ்சையை அடுத்த வல்லம் துணை மின்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பிறகுஅவர், திருமலைசமுத்திரத்தில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து அவர் திருக்கானூர்பட்டி அருகே இலவசமின் இணைப்பு பெற்ற விவசாயி வயலுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர்,
”தமிழகத்தில் குறைந்த மின்அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுடைய 8 ஆயிரத்து 905 மின்மாற்றிகள் இருப்பது கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்தது. கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய மின்மாற்றிகளை இயக்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். தஞ்சை மாவட்டத்தில் 696 இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் 187 இடங்களில் நிறைவு பெற்று இருக்கின்றன. மீதம் இருக்கக்கூடிய பணிகள் விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் தான் ஆகின்றன. படிப்படியாக ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அதேபோல் இந்த வாக்குறுதியையும் முதல்-அமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார்.
அவசர, அவசியம் கருதி எந்தந்த பணியிடங்கள் இப்போது தேவை என்பதை கருதி முதல்-அமைச்சரின் ஒப்புதலை பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போதைக்கு நிலக்கரி சம்பந்தமான பிரச்சினை ஏதும் இல்லை. தேவையான அளவுக்கு மின்சார உற்பத்தியும் இருக்கிறது.மற்ற மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு, மின்தடை இருக்கலாம். தமிழகத்திலும் அப்படியொரு நிலை வரும் என யோசிக்க வேண்டாம்.
தமிழகத்திற்கு வரக்கூடிய தொழிற்சாலைகள் மட்டுமின்றி விவசாயிகளும் இன்று விண்ணப்பித்தால் நாளை மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அளவிற்கு மின்சாரத்துறையின் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்” எனக் கூறினார்.
























