சென்னை மாநகரில் கோயம்பேடு, வேளச்சேரி, மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட மேம்பாலப் பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் அப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என பொதுப்பணி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்… “சென்னை மாநகர் விரிவடைவதால் போக்குவரத்து நெரிசல்மிகுந்திருக்கின்றன. அதனைக் கட்டுப்படுத்த மேம்பாலங்கள் அத்தியாவசியமானது. முந்தைய அதிமுக அரசு மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளது. அதனை மீண்டும் தொடங்கி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கோடு திமுக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு நவம்பர் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்படும். வேளச்சேரியில் கட்டப்பட்டு வரும் இரண்டு அடுக்கு மேம்பாலப் பணிகள் இம்மாத இறுதியில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். மேடவாக்கம் சாலை மேம்பாலப் பணியை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
























