செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்.16) தொடங்குகிறது.
மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் திரைப்படங்களை அடுத்து தனுஷ் நடிக்கும் ’நானே வருவேன்’ படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். வேலையில்லா பட்டதாரி 2, அசுரன், கர்ணன் படங்களின் வரிசையில் நான்காவதாக நானே வருவேனில் தனுஷுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் தாணு. சில தினங்களாக நானே வருவேன் திரைப்படம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து வந்த தாணு, முக்கிய அறிவிப்பு அக்.16 அன்று வெளியாகும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை, ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் குறித்த அதிகாரபூர்வ செய்தி வெளியானது. முன்னதாக படத்தின் தலைப்பு மாற்றப்படும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு படத்தலைப்பை இறுதி செய்துள்ளது.

தமிழில் தனுஷ் நடித்த ’மாறன்’, ’திருச்சிற்றம்பலம்’ என 2 திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கான பணிகளில் உள்ளன. மாறன் திரைப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க இப்படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்திலான திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். தனுஷுடன் நித்யா மேனன், ராஷி கன்னா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட நாயகியர் நடித்துள்ளனர்.
அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் தனுஷ் இணைந்த ’அட்ராங்கி ரே’ என்ற பாலிவுட் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து, திரையரங்கா, ஓடிடியா என்ற வெளியீட்டு தடுமாற்றத்தில் உள்ளது. அட்ராங்கி ரே தனுஷின் 3-வது பாலிவுட் படமாகும். முதல் இந்திப் படமான ’ராஞ்சானா’வை இயக்கிய ஆனந்த் எல்.ராய் உடன் ’அட்ராங்கி ரே’யில் தனுஷ் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான ’தி க்ரே மேன்’ அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவெஞ்சர்ஸ் திரைப்படங்களை தந்த இயக்குநர் சகோதரர்களான அந்தோனி ருஸ்ஸோ மற்றும் ரோ ருஸ்ஸோ இயக்கத்தில் ரியான் காஸ்லிங், க்ரிஸ் இவான்ஸ் உடன் தனுஷ் இணைந்து நடித்துள்ளார்.
புதுப்பேட்டை, மயக்கம் என்ன திரைப்படங்களைத் தொடர்ந்து தனுஷ்-செல்வராகவன் கூட்டணி நானே வருவேனில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சகோதர கூட்டணியில் ’ஆயிரத்தில் ஒருவன்- 2’, ’நானே வருவேன்’ என இரு படங்களில் எது முதலில் தொடங்கும் என்ற ரசிக எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் ’நானே வருவேன்’ முந்தி வந்துள்ளது. இந்த திரைபடத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தனுஷ், செல்வராகவன், கலைப்புலி தாணு, யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
























