இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நம்பிக்கையளிக்கும் இளம் வீரர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்படுவார்களா என்பது பெரும் கேள்வியாக முன் வைக்கப்பட்டு வருகிறது. வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அது போல் இந்த ஆண்டு சிறப்பான பங்களிப்பை நிகழ்த்திய இளம் வீரர்களை காண்போம்.
ருத்துராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

சென்னை அணி இவரை வெறும் 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட கெய்க்வாட் முதல் மூன்று போட்டிகளில் 5,5,10 என்கிற கணக்கில்தான் ரன்கள் எடுத்தார். இருந்தும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் கொல்கத்தாவுடனான போட்டியில் 64 ரன்களை விளாசினார். அதன் பிறகு நல்ல ஃபார்முக்கு வந்த கெய்க்வாட் ஒவ்வொரு போட்டியிலும் தன் சிறப்பான பங்களிப்பை நிகழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 635 ரன்கள் அடித்து ஆரஞ்ச் தொப்பியை பெற்றுள்ளார். விரைவில் இவர் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என தென்னாப்பிரிக்க வீரரும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுள் ஒருவருமான டூப்ளெசி வாழ்த்தியுள்ளார்.
ஹர்ஷல் படேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

அரையிறுதிக்குத் தேர்வாகி தோற்று கோப்பை கனவு ஈடேறாமல் போனாலும் ஹர்ஷல் படேல் என்கிற மகத்தான பவுலரைக் கொண்டிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் அணி. 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இத்தொடரின் நாயகனாக தேர்வாகியுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியைப் பெற்றதோடு கேம் சேஞ்சர் விருதையும் பெற்றிருக்கிறார். இவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று நம்பப்படுகிறது.
வெங்கடேஷ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் பெரிதும் சோபிக்காத கொல்கத்தா அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்பட்ட இரண்டாம்கட்டப் போட்டிகளில் வேற லெவல் ஃபார்முடன் அடித்து துவம்சம் செய்தது. அதற்கான காரணங்களில் ஒருவராய் இருப்பவர் வெங்கடேஷ் ஐயர். தொடக்க ஆட்டக்காரரான இவர் அபாரமான பங்களிப்பை நிகழ்த்தி வருகிறார். இறுதிப்போட்டியில் சென்னைக்கு எதிராக 50 ரன்களை விளாசினார்.
ஹர்ஷ்தீப் சிங் (பஞ்சாப் கிங்ஸ்)

பஞ்சாப்பை சேர்ந்த ஹர்ஷ்தீப் சிங் பவுலிங்கில் தன் அசாத்திய திறனை வெளிப்படுத்தி வருகிறார். ரன்ரேட்டைக் கட்டுப்படுத்துவதோடு விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் கில்லியாக செயல்பட்டு வருகிறார். ஹர்ஷ்தீப் சிங்கின் பங்களிப்பைப் பாராட்டிய முன்னாள் கிரிகெட் வீரர் வீரேந்திர சேவாக் இந்திய அணியில் நிச்சயம் ஹர்ஷ்தீப் சிங் இடம்பெறுவார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆவேஷ் கான் (டெல்லி கேபிடல்ஸ்)

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய ஆவேஷ் கான் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார். 16 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஹர்ஷல் படேலுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
























