சசிகலாவுக்கு அதிமுகவில் எப்போதுமே இடம் கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு இன்று முதன்முறையாக ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார் சசிகலா. ஜெயலலிதா நினைவிடத்தில் அவருக்கு மரியாதை செலுத்தி விட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் “என் மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.
சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்பேட்டியில் “அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை, அமமுகவில் வேண்டுமானால் டிடிவி தினகரன் இடம் கொடுக்கலாம். அதிமுகவை கைப்பற்ற அவர் நினைத்தால் அது பகல் கனவாகத்தான் இருக்கும். அம்மா நினைவிடத்துக்குச் சென்ற சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம். சசிகலா அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த தார்மிக உரிமை கிடையாது. அவர் அதிமுக கொடியைப் பயன்படுத்தி குழப்பத்தை விளைவிக்கிறார். இதற்கு சட்டப்படி முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
























