இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியதன் மூலம் 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. சென்னை ரசிகர்கள் இதனை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. கொல்கத்தா லீக் சுற்றின் இரண்டாவது பகுதியில் தனது திணறடிக்கும் பெர்ஃபாமன்ஸ் மூலம் ரன் ரேட்டை உயர்த்தி சம புள்ளியில் இருந்த மும்பையை பின்னுக்குத்தள்ளி அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் பெங்களூரு, டெல்லி அணிகளை துவம்சம் செய்து விட்டு சென்னையுடன் இறுதிப்போட்டிக்கு வந்தது. லீக் சுற்றின் கடைசி 3 போட்டிகளில் சென்னை அணி தோற்றிருந்தாலும் முதல் தகுதிச்சுற்றில் சென்னையை வீழ்த்தியதன் மூலம் நல்ல ஃபார்மில் இறுதிக்குள் நுழைந்திருந்தது.
இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் யார் வெல்லப்போகிறார்கள் என்கிற பதற்றம் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டிருந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. கொல்கத்தா அணியின் பலம் சேசிங்தான். டிஃபெண்டிங்கில் கொல்கத்தா அணி பெரிதாக வெல்லவில்லை. ஆனால், சென்னை அணி டிஃபெண்டிங்கிலும் நான்கு முறை வென்றிருப்பதால் சற்றே கூலாக இருந்தார்கள். கெய்க்வாட் 32 ரன்களில் அவுட் ஆனாலும் இந்த தொடரில் அதிக ரன்கள் பெற்றமைக்கான ஆரஞ்ச் தொப்பியைப் பெற்றார். ஃபேப் டூப்ளஸி நிதானமாக நின்று விளையாடினார். 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது சென்னை அணி. டூப்ளசி 86 ரன்களை விளாசித் தள்ளினார்.
193 ரன்கள் என்கிற இலக்கோடு களமிறங்கிய கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் – சுப்மன் கில் கூட்டணி அடித்து நொறுக்க ஆரம்பிக்க சென்னை சற்றே கதிகலங்கிப் போனது. இந்த இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலே வெற்றி நம் பக்கம் என சென்னை ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருக்க 50 ரன்களில் வெங்கடேஷ் ஐயரும், 51 ரன்களில் சுப்மன் கில்லும் அவுட் ஆக சென்னை ரசிகர்கள் சற்றே ஆறுதலடைந்தனர். இந்த இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலே வரிசையாக விக்கெட்டுகள் விழும் என்று கணித்த நிலையில் அதுதான் நடந்தது. வரிசையாக விக்கெட்டுகள் விழ மேட்ச் முழுவதும் சென்னை பக்கம் என்றிருந்த நிலையில் பத்தாவதாக களமிறங்கிய ஷிவம் மாவி இரண்டு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்து சற்றே நம்பிக்கை கொடுத்தார். ஹேசில்வுட், ஜடேஜா, ப்ராவோ, தாக்கூர், தீபக் சஹார் ஆகிய அனைத்து பவுலர்களுமே சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது.
2019ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஒரு ரன்னில் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டது சென்னை அணி. 2020ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் அரையிறுதிக்குக்கூட தேர்வாகவில்லை. அப்போது பேட்டியளித்த தோனி, எங்கள் தவறை உணர்கிறோம். மீண்டும் நல்ல ஃபார்முடன் திரும்பி வருவோம் என்று கூறியிருந்தார். அந்த ஃபார்மோடு வந்து இப்போது கோப்பையைத் தட்டித் தூக்கியிருக்கிறது சென்னை அணி.
























