சமந்தா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கின்றனர்.
ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள ப்ரொடக்ஷன் 30 என்கிற பெயரிடப்படாத புதிய படத்தில் சமந்தா நடிக்கிறார். அதற்கான அறிவிப்பை அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில்தான் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் விவாகரத்து நடைபெற்றது. தென்னிந்திய திரையுலகமே மெச்சிய இந்த தம்பதியினரின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில் சமந்தா அனைத்தையும் மறுத்தார். விவாகரத்து என்பது வலி நிறைந்தது என்றாலும் சில சமயங்களில் தவிர்க்க முடியாதது. அதிலிருந்து மீண்டு வர கொஞ்சம் காலம் வேண்டும் என்று சமந்தா தெரிவித்திருந்தார். நாக சைதன்யா குடும்பத்தின் சார்பில் ஜிவனாம்சமாக தர முன் வந்த 200 கோடி ரூபாய் பணத்தையும் சமந்தா நிராகரித்தார்.

விவாகரத்தை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகரும் சமந்தாவுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. எத்தகைய துயரிலிருந்தும் மீண்டு வர நமக்கான வேலையிலும் இலக்கிலும் கவனம் செலுத்தி செயலாற்றினாலே போதும் என்பது போல் படங்களில் தனது கவனத்தை செலுத்தியிருக்கிறார் சமந்தா. விவாகரத்துக்குப் பிறகு அவர் நடிக்கவிருக்கும் படம் இது.
படத்தின் தலைப்பு, தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
























