சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. முற்போக்கு வசனங்களைக் கொண்டு அம்பேத்கரை அடிப்படையாக வைத்து சூர்யாவின் வழக்கறிஞர் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகவிருக்கிறது ஜெய்பீம் திரைப்படம். சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெயின்மெண்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. கூட்டத்தில் ஒருத்தன் திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
பீமாராவ் அம்பேத்கரைப் போற்றும் விதத்தில் ஜெய்பீம் என்கிற சொல் வழங்கப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் வாழ்வு, சாதியத்துக்கு எதிரான அவரது போராட்டம் என அனைத்தையும் உணர்த்தும் சொல்லாக ஜெய்பீம் என்கிற சொல் இருக்கிறது. அதனைத் தலைப்பாகக் கொண்டிருக்கும்போது இத்திரைப்படம் சாதிய ஆதிக்கத்துக்கு எதிரான திரைப்படம் என்கிற எண்ணம் அனைவருக்குள்ளும் உருவாகியிருந்தது. ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட்லுக்கில் சூர்யா வழக்கறிஞராய் நடிக்கிறார் என்பது உறுதியாகியிருந்தது.
சூர்யாவோ பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். பழங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக வழக்கறிஞரான சூர்யா மேற்கொள்ளும் சட்டப்போர்தான் படத்தின் மையம் என்பது டீசர் மூலம் தெரிய வருகிறது. “திருடங்களுக்குக்குன்னு எதாவது சாதி இருக்கா… எல்லா சாதியிலும்தான் திருடன் இருக்கான்’’ மாதிரியான சாதியப்பார்வைக்கு எதிரான வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
இத்திரைப்படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, கதிர் கலை இயக்கம் செய்திருக்கிறார். இத்திரைப்படம் நவம்பர் 2ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது.
























