நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடு, மாடு மற்றும் மனிதர்களைத் தாக்கி வந்த டி23 புலியை வனத்துறையினர் உயிருடன் பிடித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்குட்பட்ட தேவன் எஸ்டேட், மேஃபீல்டு, நெல்லிக்குன்னு, மசினகுடி, சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் உலவி வந்த அப்புலியை பிடிக்கும் பணி 21 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்தது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஓம்பட்டா நீா்த்தேக்க வனப் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவானதை வனத்துறையினா் கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்தனா்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணியில் இறங்கிய குழுவினா் போஸ்பாறா சங்கிலிகேட் வனப் பகுதிக்குள் புலியின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால், வனத்தில் உள்ள புதருக்குள் புலி நடமாடுவதால் மயக்க ஊசி செலுத்த முடியாமல் குழுவினா் வெளியேறினா். புலியை மயக்க மருந்து கொடுத்து பிடிப்பது பெரும் சவாலான காரியமக மாறியது. ஆட்கொல்லிப் புலி எனக்கூறி அதனை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அப்புலி ஆட்கொல்லிப்புலி என்பது உறுதிசெய்யப்படவில்லை என்பதால் அதனை உயிருடன் பிடிக்க உத்தரவிடப்பட்டது.
புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மரங்களில் பரண் அமைத்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், மசினகுடி-முதுமலை சாலையில் புலி நடந்து சென்றதை பார்த்த வனத்துறையினர் வியாழக்கிழமை இரவு கால்நடை மருத்துவக் குழுவினரின் உதவியுடன் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். நான்கு முறை மயக்க ஊசியை செலுத்தியதில், 2 ஊசிகள் புலியின் உடம்பில் சென்று சேர்ந்த நிலையிலும் புலி வனப்பகுதிக்குள் அரை மயக்க நிலையில் தப்பிச் சென்றது. இதனைத் தொடர்ந்து தப்பிச் சென்ற புலியை தேடும் பணியில் 21ஆவது நாளாக இன்றும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இன்று காலையில் மசினகுடி வனப்பகுதியில் புதருக்குள் சென்ற புலியை தொடர்ந்து கண்காணித்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் மதியம் 2.30 மணிக்கு இரண்டாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.
மயக்க ஊசி செலுத்தி புலியைப் பிடித்து வண்டலூர் உயிரியியல் பூங்காவில் விடப்போவதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா இல்லை அடர்வனத்துக்குள் புலியை கொண்டு விடும் பணிகள் நடைபெறுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும். புலி பிடிபட்டதால் கூடலூர், மசினகுடி பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
























