இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் இணைந்து நிறுவியிருக்கும் ‘ரௌடி பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ‘ஊர்க்குருவி’ என்கிற படம் தயாராகி வருவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இத்திரைப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து வந்த கவின் ’பிக்பாஸ்’ சீசன் 3 மூலம் கவனம் ஈர்த்ததோடு தனக்கான ரசிகப்பரப்பையும் பெற்றார். அதன்பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவர் சமீபத்தில் வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் ‘ஆகாஷ்வாணி’ என்கிற இணையத்தொடரிலும் கவின் நடித்துள்ளார்.

இந்நிலையில், ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்துக்கு அடுத்ததாக அந்நிறுவனம் தயாரிக்கும் ‘ஊர்க்குருவி’ திரைப்படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகும் இத்திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை தென்மாவட்டங்களில் நடத்தட் ஹ்திட்டமிட்டிருக்கிறார்கள். அஜய் ஞானமுத்து, விக்னேஷ் சிவன் ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
























