இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை – கொல்கத்தா அணிகளுக்கிடையே இன்று இரவு 07.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் வெல்வதற்கு இரு அணிகளுக்கும் சம வாய்ப்புள்ள நிலையில் காலம்தான் பதில் சொல்லும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்த அணிகளில் முதல் தகுதிச்சுற்றில் டெல்லி அணியை வீழ்த்தியதன் மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்வானது சென்னை அணி. எலிமினேட்டரில் பெங்களூரு அணியையும், இரண்டாவது தகுதிச்சுற்றில் டெல்லி அணியையும் வென்று கொல்கத்தா அணி சென்னை அணியுடன் மோதவிருக்கிறது. இரண்டு அணிகளும் ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணி என்பதுடன் இந்தத் தொடரில் சமபலத்துடன் இருப்பதால் யார் கோப்பையை வெல்லப்போகிறார்கள் என்கிற பரபரப்பு ரசிகர்களைத் தொற்றிக்கொண்டுள்ளது.
இரு அணிகளும் சம பலத்துடன் இருக்கின்றன. கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை லீக் சுற்றில் டிஃபெண்டிங்கில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றிருக்கிறது. மற்ற வெற்றிகள் அனைத்தும் சேசிங்கில் பெற்றவைதான். சென்னை அணி நான்கு முறை டிஃபெண்டிங்கில் ஜெயித்திருக்கிறது. டெல்லி – கொல்கத்தா இடையேயான போட்டியின் போது கூறப்பட்டது போல் எந்த அணி டாஸ் வெல்கிறதோ அந்த அணிக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது போல் இந்த ஆட்டத்தில் கூறி விட முடியாது. கொல்கத்தா டாஸ் வின் செய்து சேசிங்கைத் தேர்வு செய்தாலும் சென்னை அணி டிஃபெண்ட் செய்து விடும் என்கிற நம்பிக்கையில் சென்னை ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வென்று நல்ல ஃபார்மில் கொல்கத்தா அணி இருக்கிறது. கோப்பை எங்களுக்குதான் என கொல்கத்தா ரசிகர்கள் மார்தட்ட எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற த்ரில்லான மேட்சாக இது இருக்கப்போகிறது. சென்னை ரசிகர்கள் எதற்கும் தேவைப்படும் என பிபி மாத்திரை வாங்க மெடிக்கல்ஸ் விரைந்து கொண்டிருக்கின்றனர். இந்த இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் 4 முறை கோப்பைகளை வென்று மும்பையின் சாதனையை நெருங்கும். கொல்கத்தா வென்றா மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சென்னை அணியின் சாதனையை சமன் செய்யும்.
























