தமிழின் இரட்டை இயக்குநர்களான புஷ்கர் – காயத்ரி ஆகியோர் இயக்கிய விக்ரம் வேதா திரைப்படம் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அத்திரைப்படம் இந்தியில் அதே ரீமேக் செய்யப்படுகிறது. அதன் படப்பிடிப்பு இன்று பூஜையோடு தொடங்கியது.
இரட்டை இயக்குநர்களான புஷ்கர் – காயத்ரி தம்பதியினர் ஓரம் போ, வ குவாட்டர் கட்டிங் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினர். இப்படங்களி வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லையென்றாலும் திரை ஆர்வலர்களால் ரசிக்கப்பட்டது. இந்நிலையில் மாதவன் – விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து 2017ம் ஆண்டு இவர்கள் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படம் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றது. வணிக ரீதியிலான வெற்றியோடு திரை விமர்சகர்களாலும் இத்திரைப்படம் கொண்டாடப்பட்டது.
விக்ரமாதித்யன் – வேதாளம் கதைகளில், விக்ரமாதித்யன் முதுகில் ஏறி வேதாளம் கேள்வி கேட்கும் ஃபார்முலாவை திரைக்கதைக்குள் பொருத்தி மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான் விக்ரம் வேதா திரைப்படம். விக்ரமாதித்யன் இடத்தில் மாதவனும் வேதாளம் இடத்தில் விஜய் சேதுபதியும் இருந்து ஒரு கொலைக்குப் பின் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் அபாரமான திரைக்கதையில் அப்படத்தை வெற்றிப்படமாக்கினர் புஷ்கர் – காயத்ரி.

இத்திரைப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து இந்தியில் ரீமேக் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியிலும் விக்ரம் வேதா என்கிற தலைப்பே வைக்கப்பட்டிருப்பதோடு விக்ரம் கதாப்பாத்திரத்தில் ஹ்ரித்தி ரோஷனும் வேதா கதாப்பாத்திரத்தில் சயிஃப் அலிகானும் நடிக்கின்றனர். தமிழில் இத்திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி இரட்டை இயக்குநரே இந்தியிலும் இத்திரைப்படத்தை இயக்குகின்றனர். அதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது.
























