டெல்லி – கொல்கத்தா அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்றில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் வருங்காலத்தில் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக முன்னாள் கிரிகெட் வீரரும், பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.
டெல்லி – கொல்கத்தா அணிகளுக்கிடையே நேற்று நடந்த இரண்டாவது தகுதிச்சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. 136 என்கிற இலக்கோடு களமிறங்கிய கொல்கத்தா. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். அவற்றுள் 4 ஃபோர்களும், 3 சிக்ஸ்களும் அடக்கம். பெரும் போராட்டத்துக்குப் பிறகு கொல்கத்தா அணி கடைசி ஓவரின் 5வது பந்தில் வெற்றிபெற்றது. வெற்றிக்குப் பெரும் பங்காற்றிய வெங்கடேஷ் ஐயர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியில் ‘கொல்கத்தா அணி பேட்டிங் செய்தபோது முதல் 10 ஓவர்களில் பனிப்பொழிவின் காரணமாக பேட்டிங் செய்வது சுலபமாக இருந்தது. எங்கள் அணிக்கு அத்தகைய சூழல் இல்லை. அதன் காரணமாக எங்களால் அதிக ரன்களை எடுக்க முடியவில்லை. கொல்கத்தா அணியின் தொடக்கக் கூட்டணி அபாரமாக விளையாடியது. அவர்களில் குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் என்கிற நல்ல வீரரை கொல்கத்தா அணி கண்டெடுத்துள்ளது. கொல்கத்தா அணியின் மகத்தான வீரராக அவர் இருப்பார் என்பது இந்த பங்களிப்பின் வாயிலாக உறுதிப்படுகிறது. இதே உத்வேகத்துடன் அவர் தொடர்ந்து விளையாடினார் என்றால் எதிர்காலத்தில் அவர் இந்திய அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்புகளும் அதிகளவில் இருக்கின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.
























