டெல்லி கேபிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்றில் மயிரிழையில் தனது வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டது டெல்லி கேபிடல்ஸ் அணி.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் இரண்டாவது தகுதிச்சுற்று நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி – கொல்கத்தா இரு அணிகளுமே சேசிங்கில்தான் அதிக வெற்றி பெற்றிருந்த நிலையில் எந்த அணி டாஸ் வென்றாலும் அந்த அணி முதலில் பவுலிங்கைத்தான் தேர்ந்தெடுக்கும் என்றும், டாஸ் வெல்லும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் கணிக்கப்பட்டது.
அதன்படி கொல்கத்தா அணி டாஸ் ஜெயித்து முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தது. பேட்டிங்கில் வலுவான அணியான டெல்லி அணி நேற்றைய போட்டியில் சிறப்பான பங்களிப்பை நிகழ்த்தவில்லை. ஷிகர்தவாண் அடித்த 36 ரன்கள்தான் அதிகபட்சமாக இருந்தது. 5 விக்கெட்டுகள் இழப்புக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியை 135 ரன்களில் சுருட்டியது கொல்கத்தா அணி.
இதெல்லாம் ஒரு ஸ்கோரா? இது சுப்மன் கில்லுக்கும் வெங்கடேஷ் ஐயருக்குமே பத்தாதேடா என்று கொல்கத்தா ரசிகர்கள் கெத்தாக மேட்ச் பார்க்க அவர்களை அலறவிட்டதுதான் இந்த ஆட்டத்தின் சிறப்பே. கொல்கத்தா பேட்டிங் தொடக்கம் வெகு சிறப்பாக இருந்தது. வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளுக்கு 55 ரன்களை விளாசினார். சுப்மன் கில் 46 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்திருந்தார். நிதிஷ் ராணா 12 பந்துகளுக்கு 13 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த மூன்று விக்கெட்டுகள் வரை கொல்கத்தாதான் நிச்சயம் வெல்லும் என்றிருந்த நிலை அப்படியே தலைகீழாக மாற ஆரம்பித்தது. தினேஷ் கார்த்திக், இயான் மார்கன், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரேன் ஆகிய நால்வரும் ஒரு ரன் கூட அடிக்காமல் டக் அவுட் ஆனார்கள். கடைசி ஓவரை அஷ்வின் பந்து வீசினார். 6 பந்துகளுக்கு 6 ரன்கள் இலக்கு என்கிற நிலையில் ஹசன் மற்றும் சுனில் நரேன் ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி கொல்கத்தா அணியை அலற விட்டார். 2 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ராகுல் திரிபாதி சிக்ஸ் அடித்து கொல்கத்தா வெற்றியை உறுதி செய்தார்.
லீக் சுற்றில் கில்லியாக இருந்த டெல்லி அணி அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறவில்லை. கடந்த ஆண்டும் இறுதிப்போட்டி வரை சென்று மும்பையிடம் தோற்றதால் டெல்லி அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதே நேரம், இறுதி வரை போராடித் தோற்ற அவர்களை பாராட்டியும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இப்போட்டியில் வென்றதன் மூலம் நாளை சென்னை அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவிருக்கிறது கொல்கத்தா அணி.
























