ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அக்ஷர் படேலுக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் 17ம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கின்றன. இந்தத் தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் மாற்றம் செய்ய இந்திய அணிக்கு அக்டோபர் 15ம் தேதி வரையிலும் கால அவகாசம் உள்ள நிலையில் அதில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முதன்மை அணியில் இடம்பெற்றிருந்த ஆல் ரௌண்டர் அக்சர் படேல் தயார் நிலை வீரர்கள் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தயார் நிலை பட்டியலில் இருந்த ஷர்துல் தாக்கூர் முதன்மை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்து வீச்சில் தனது அபாரமான திறனை வெளிப்படுத்தி வருகிறார் ஷர்துல் தாக்கூர். அதன் விளைவாகவே அவர் பிரதான அணியில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்கிற கருத்தும் நிலவி வருகிறது. மேலும், அக்சர் படேலை போலவே தாக்கூரும் ஓர் ஆல் ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
























