சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய கிரிகெட் வீரர் டேவிட் வார்னரிடமிருந்த கேப்டன் பொறுப்பு இந்த ஆண்டு போட்டியின் இடையில் கேன் வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டதை அடுத்து தன்னை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதற்கான காரணம் முறையாக அறிவிக்கப்படவில்லை என வார்ன தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வார்னர் “என்னை அணியிலிருந்து நீக்கியதற்கான காரணம் என்னவென்று எனக்கு அறிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் நான் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தேன். அதை வைத்து ஒரு வீரரின் திறனை முடிவு செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. அணியிலிருந்து விலக்கப்பட்டதற்கும் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்குமான உரிய விளக்கத்தை சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் எனக்குத் தெரிவிக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.
எனது இந்த ஆண்டு பங்களிப்பு சற்று மோசமாக இருந்தது உண்மையிலும் வருத்தத்துக்குரியதுதான். அந்த வீழ்ச்சியிலிருந்து நான் மீண்டு விடுவேன். இந்த ஆண்டு ஐபிஎல் முடிந்த பிறகு நடைபெறும் ஏலத்தில் ஹைதராபாத் அணி என்னை தேர்வு செய்வார்களா என்பது பற்றி தெரியவில்லை. நான் ஹைதராபாத் அணிக்காக விளையாடவும் தலைமை தாங்கவும் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
























