பாம்பைக் கடிக்க வைத்து இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கணவர்தான் குற்றவாளி என்பதைக் கண்டறிந்த காவல்துறையின் மதிநுட்பத்துக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன.
கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் உத்ரா. இவரது காணவர் நீரஜ். கடந்த ஆண்டு மே மாதம் உத்ரா தனது வீட்டில் நாகப்பாம்பு கடித்து இறந்தார். இது குறித்து கொல்லம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். உத்ராவின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் உத்ராவை ஏற்கனவே கட்டுவிரியன் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதித்தது தெரிய வந்த நிலையில் காவல்துறையினர் சந்தேகம் உத்ராவின் கணவர் நீரஜ் பக்கம் திரும்பியது.

நீரஜிடம் நடத்திய விசாரணையில் அவர்தான் ஏற்கனவே இரண்டு முறை பாம்பை விட்டு உத்ராவை கடிக்க வைக்க முயற்சி செய்ததும், இறுதியில் ஒரு வாரம் பாம்பை பட்டினி போட்டு உத்ரா மீது ஏவி விட்டதும் தெரிய வந்தது. இரண்டாவது திருமணத்துக்கு உத்ரா தடையாக இருந்ததன் விளைவாகவே அவரைக் கொலை செய்ததாக நீரஜ் ஒப்புக்கொண்டிருந்தார்.
ஒரு கொலை வழக்கை எவ்வாறு அறிவியல்பூர்வமாகவும், தொழில்முறையிலும் விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்பதற்கு இந்த வழக்கில் விசாரணை நடத்திய காவல்துறை தனிப்படையினரின் முழு முயற்சியே உதாரணம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உண்மையைக் கண்டறிய தடயவியல், பாம்பின் மரபணு உள்ளிட்ட பல நுணுக்கமான விஷயங்களை தனிப்படையினர் விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
கணவர் நீரஜ்தான் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. கொல்லம் நீதிமன்றம் அவருக்கு 5 லட்சம் அபராதத்துடன் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
























