மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தமிழ்த் திரைத்துறையினர் அவரது மறைவுக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிறை ஆடை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் படங்களில் எதிர்நாயகன் பாத்திரத்திலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார். திரை நடிகரான பிறகும் நாடங்களில் நடித்துள்ளார்.
இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீகாந்த்க்கு 83 வயதாகிறது. வயது முதிர்வின் காரணமாக உடல்நலக்குறைவுக்கு ஆளாகியிருந்த அவர் நேற்று உயிரிழந்தார். அவர் மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்ரீகாந்துடன் இணைந்து நடித்த நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று பதிவிட்டிருக்கிறார்.
























