9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் 77 வார்டு உறுப்பினர் போட்டிகளில் வென்றுள்ளனர். இதன் மூலம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்குகளை விஜய் மக்கள் இயக்கம் பெற்றுள்ளது. இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தியது எது என்பது பற்றிப் பார்ப்போம்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று காலையில் இருந்து வெளியாகிக்கொண்டு இருக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் திமுக 136 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் போட்டியிட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால் இவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். விஜய் மக்கள் இயக்க கொடி மற்றும் விஜய் புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்ய விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்களுக்கு அனுமதி அளித்திருந்தது. மொத்தம் 169 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்களில் இவர்கள் போட்டியிட்டனர். இவற்றில் மாவட்ட கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி எதிலும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றிபெறவில்லை. மற்றபடி பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முன்னிலை வகித்து வருகிறார்கள்.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 77 பேர் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். சுயேச்சையாக போட்டியிட்டு பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி உட்பட 77 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் களமிறங்கிய முதல் தேர்தலிலேயே இந்த வெற்றியைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது விஜய் மக்கள் இயக்கம்.
ஏனென்றால் இவர்கள் பெரிய கட்சி பின்னணியை கொண்டவர்கள் கிடையாது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். உள்ளூர் அளவில் பிரபலமான நபர்களாக இருப்பதால்தான் இவர்களுக்கு தேர்தலில் வெற்றி கிடைத்து இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்திற்கு இது ஒரு வகையில் நல்ல சிக்னலாக பார்க்கப்படுகிறது. எப்படி தேமுதிகவை தொடங்கிய காலத்தில் விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலில் ஆழம் பார்த்தாரோ அதேபோல்தான் தற்போது விஜய் ஆழம் பார்த்து அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்று இருக்கிறார்.
பத்தாண்டுகளுக்கும்ம் மேலாக அரசியல் களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சியை விட அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் வென்றுள்ளனர். நாம் தமிழரை விட இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வருகின்றன. முழு முடிவுகள் வெளியாகும் போதும் நிலைமை மாறலாம். பெரிய அளவில் பிரச்சாரம், பேட்டி எதுவுமே இல்லாமல் சத்தமே இன்றி விஜய் மக்கள் இயக்கம் இந்த சாதனையை செய்திருக்கிறது.
இதனையடுத்து தற்போது நாம் தமிழர் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையில் கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நாம் தமிழரை விட நாங்கள் அதிக இடங்களில் வென்றுவிட்டோம் என்று விஜய் மக்கள் இயக்கத்தினரும், விஜய் ரசிகர்களும் இணையத்தில் ட்வீட் செய்து கொண்டாடி வருகிறார்கள். இதற்கு நாம் தமிழர் தரப்போ, நடிகர்களை பார்த்துதான் இப்போதும் தமிழர்கள் வாக்களிக்கின்றனர். களத்தில் நிற்பவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் அதற்கு பதில் கொடுத்து வருகிறார்கள்.
தனிப்பட்ட வகையில் பாமகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் பெரிய கட்சியாக இத்தேர்தலில் பார்க்கப்பட்ட நிலையில் விஜய் மக்கள் இயக்கம் பெற்றிருக்கும் வெற்றி அதனை மாற்றியமைத்திருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் வருகையும், இந்த வெற்றியும் யாரும் எதிர்பார்த்திராதது. இது விஜய் மக்கள் இயக்கத்துக்குக் கிடைத்திட்ட பெரும் வெற்றி என்றோ, இந்த வெற்றியைக் கொண்டு அரசியல் களத்துக்கு விஜய் வரலாம் என்றோ கூறிவிட முடியாது. ஏனெனில் உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர்களைப் பொறுத்தவரை கட்சி தாண்டி வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்குதான் வெற்றியைத் தீர்மானிக்கும். அப்படியாக விஜய் மக்கள் இயக்கத்தில் வென்ற பலரும் அத்தகைய செல்வாக்கு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
























