ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணியிடம் பெங்களூரு அணி தோல்வியடைந்ததை அடுத்து சமூக வலைதளங்களில் பெங்களூரு அணி மீதான வெறுப்புணர்வுடன் பதிவுகள் இடப்படுவது வேதனை தருவதாக அந்த அணி வீரர் கேலன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி இம்முறையேனும் வெல்லுமா? என்று ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், வெற்றி – தோல்வி இரண்டுமே விளையாட்டின் அங்கம்தான். எந்த முடிவாக இருந்தாலும் அதற்கு தயாராக இருங்கள் என கோலி தெரிவித்திருந்தார்.
அப்போட்டியில் இறுதி வரை போராடி பெங்களூரு அணி தோற்றது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் பெங்களூரு அணியை எல்லை மீறி விமர்சித்தும், கேலி செய்தும் பதிவுகள் இடப்பட்டுள்ளன. அதற்கு அந்த அணி வீரர் கேலன் மேக்ஸ்வெல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். ”பெங்களூரு அணி இந்தத் தொடரில் சிறப்பான பங்களிப்பை செய்திருந்தது. இருந்தும் முக்கியமான போட்டியில் தோல்வியைச் சந்தித்திருப்பது வருத்தத்துக்குரியதுதான். ஆனால் அதற்காக இத்தனை வெறுப்பை உமிழத் தேவையில்லை. சமூக ஊடகங்களில் பெங்களூரு அணியை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வரும் குப்பைகள் முற்றிலும் அருவறுப்பானவை. வெறுப்பை உமிழ்வதற்கு மாற்றாக ஒழுக்கமான நபராக இருக்க முயற்சி செய்யுங்கள். வீரர்கள் மீதான தங்களின் அன்பையும், பாராட்டையும் வெளிப்படுத்திய உண்மையான ரசிகர்களுக்கு நன்றி.” என்று அவர் தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
டெல்லி – சென்னை அணிகளுக்கிடையே நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி மேட்ச் ஃபினிஷிங் செய்ததைக் கொண்டாடி கோலி ட்வீட் செய்திருந்தார். இதனைத்தான் கேம் ஸ்பிரிட் என்பார்கள். விளையாட்டு வீரர்கள் அந்த பண்போடு வெற்றி தோல்வியை அணுகுகிறார்கள். ரசிகர்கள்தான் அந்த எல்லைகளை உடைத்தெறிகிறார்கள் என்பது மீண்டும் நிருபணமாகியிருக்கிறது.
























