ஹரிஷ் கல்யாண் – ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ள ‘oh மணப்பெண்ணே’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் தேவாரகொண்டா – ரிது வர்மா நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படமான ‘பெல்லி சூப்புலு’ திரைப்படத்தின் தமிழ் ரீ மேக் ஆன ‘oh மணப்பெண்ணே’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மெல்லிய காதல் இழையோடும் கதையான பெல்லி சூப்புலு திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. கரம் மசாலாவாக வந்து கொண்டிருந்த தெலுங்குப் படங்களுக்கு மத்தியில் முற்றிலும் யதார்த்த பாணியில் புதிய அலையாக வெளிவந்த இத்திரைப்படம் தெலுங்கில் ஓர் ட்ரெண்ட் செட்டராகவே மாறியுள்ளது.

இத்திரைப்படத்தை கௌதம் மேனன் தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இத்திரைப்படம் ‘oh மணப்பெண்ணே’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. விஜய் தேவாரகொண்டா கதாப்பாத்திரத்தில் ஹரிஷ் கல்யாணும், ரிது வர்மா கதாப்பாத்திரத்தில் ப்ரியா பவானிசங்கரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இரண்டாவது நாயகனாக குக் வித் கோமாளி அஷ்வின் நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களுக்கும் ஏற்ற கதை என்பதால் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. நேரடி ஓடிடி ரிலீசாக விரைவில் ஹாட் ஸ்டாரில் இப்படம் வெளியாகவிருக்கிறது.
























