லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை குறித்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி நாளை (அக்டோபர் 13) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளிக்கவிருக்கிறார்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா வருகையைக் கண்டித்தும், வேளாண் மசோதாவைத் திரும்பப் பெறக்கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினர் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 4 பேர் உயிரிழந்தனர். அதனையடுத்து நடைபெற்ற கலவரத்தில் மொத்தம் 8 பேர் பலியாகினர். இச்சம்பத்தில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக நியாமான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நாளை காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளனர்.
























