ஆர்.பொன்னுசாமி என்ற கோவையை சேர்ந்த நபர், சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் தொற்று படிப்படியாக குறைய தொடங்கியதும், ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வார இறுதியின் 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையில், வருகிற 15ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை வருகிறது. அன்று தமிழக அரசு உத்தரவின்படி கோவில் திறக்காது. வார இறுதி நாட்களில் சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை திறக்க அனுமதிக்கும் அரசு, துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் பிடிவாதமாக செயல்படுகிறது. எனவே, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களைத் திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று தன் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு அந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராகியிருந்த அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மத்திய அரசினுடைய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் கோவில்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதைக் கேட்ட நீதிபதிகள் தமிழக அரசின் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு இந்த வழக்கு விசாரணையை பிற்பகல் 1.30 மணிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள்.
























