ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று தற்போது நடைபெறவுள்ள நிலையில் இப்போட்டி குறித்து கோலி கூறியுள்ளது ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றும் எலிமினேட்டரில் பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில் வெல்லும் அணி குவாலிஃபயர் 2 க்கு தேர்வாகும். தோற்கும் அணி வெளியேறும் என்கிற நிலையில் வாழ்வா சாவா போட்டி இன்று நடைபெறவிருக்கிறது.
ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி அணியின் வியூகம் குறித்து பேசியிருக்கிறார் “வெற்றி – தோல்விகளால் ஆனதுதான் விளையாட்டு. நாம் விளையாடும் போது ஒன்று வெற்றி பெறுவோம். இல்லையென்றால் தோல்வியை தழுவுவோம். அந்த இரண்டையும் நாம் நினைத்து பார்க்கும் போது எதிர்மறையாக நிற்கின்ற தோல்வியை நோக்கியே நமது மனநிலை தானாக செல்லும். ஆனால் எங்களது கவனம் எல்லாம் களத்தில் நாங்கள் அமைத்துள்ள வியூகங்களை செயல்படுத்தி, அதன் மூலம் வெற்றியை பெறுவது மட்டுமாக இருக்கிறது. அந்த ஒரே குறிக்கோளோடு இருந்தால் நிச்சயம் நமது செயல்பாட்டின் வழியே வெற்றியைப் பெற முடியும். பெங்களூரு அணி தற்போது அதனை முறையாக செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறது. நிச்சயம் வெற்றியை நோக்கியே எங்களது போராட்டம் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
























