கடந்த 8-ம் தேதி இரவு லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மராட்டியத்தின் மும்பை நோக்கி புறப்பட்டது. மராட்டிய மாநிலத்தின் லகட்புரி நகரில் உள்ள நிலையத்திற்கு ரெயில் வந்தபோது அதில் பயங்கர ஆயுதங்களுடன் 8 கொள்ளையர்கள் ஏறினர். 2ம் வகுப்பு படுக்கை பெட்டியில் ஏறிய கொள்ளையர்கள், பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை கூர்மையான ஆயுதங்களை காட்டி மிரட்டி கொள்ளையடித்தார்கள்.
அதோடு, 20 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவரை அவரது கணவர் மற்றும் சக பயணிகள் முன்பாக ஒடும் ரெயிலில் கொள்ளையர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதை தடுக்க முயன்றபோது கொள்ளையர்கள் கூர்மையான ஆயுதங்களால் இளம்பெண்ணின் கணவர் மற்றும் சக பயணிகளை தாக்கினர்.
மும்பையின் கசரா ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்ததும் பயணிகள் கூச்சல் போட்டனர். இதையடுத்து, அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் கொள்ளையர்களில் 4 பேரைத் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர். ஆனால், எஞ்சிய 4 கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர், ரெயில்வே போலீசார்.
இந்த நிலையில், ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய எஞ்சிய 4 கொள்ளையர்களையும் ரெயில்வே போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதனால்,எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒட்டுமொத்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த 8 பேரில் 4 பேர் ஏற்கனவே குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் 8 பேரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
























