ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் மோதவிருக்கும் பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது.
இந்தப் போட்டியில் வெல்லும் அணி குவாலிஃபயர் 2 க்கு தேர்வாகும். தோற்கும் அணி வெளியேறும் என்கிற நிலையில் வாழ்வா சாவா போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. பெங்களூரு அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ஈ சாலா கப் நம்தே என்று சொல்லி சொல்லி பெங்களூரு ரசிகர்களே டயர்டாகி விட்டார்கள். நமக்கும் கோப்பைக்கும் ராசியே இல்லை என்று நினைத்தாரோ என்னவோ இந்த ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப்போவதாக கோலி அறிவித்துள்ளார். கோலி கேப்டனாக இருந்து கோப்பை வெல்ல வேண்டும் என்பது பெங்களூரு அணி ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. நம்பிக்கையளிக்கும் விதத்தில் பெங்களூரு அணி வலுவாகவே இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தாலும் சென்னை அணிக்கு நிகராக 18 புள்ளிகள் பெற்றுள்ளது.
கொல்கத்தா அணி இந்த ஆண்டு தொடரின் முதற்பாதியில் அவ்வளவாக சோபிக்கவில்லை. இரண்டாவது பாதியில் அடித்து வெளுக்கத் தொடங்கினார்கள். பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே கில்லியாகக் கலக்கிய கொல்கத்தா அணி மற்ற அணிகளை ஆட்டம் காணச் செய்தது. பேட்டிங்கில் வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, சுப்மன் கில் ஆகியோரும் பவுலிங்கில் சுனில் நரேன், வருண் சர்க்கரவர்த்தி ஆகியோரும் மரண மாஸ் பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தி வருகின்றனர். போதாக்குறைக்கு ஆண்ட்ரூ ரசல் போன்ற ஆல்ரவுண்டரையும் கொண்டு அணி வலுவாக இருக்கிறது.
இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருக்கும் நிலையில் யார் வெல்லப்போகிறார்கள் என்கிற த்ரில் ஐபிஎல் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. டெல்லி – சென்னை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் வென்றதன் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குச் சென்று விட்டது. இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் வெல்லும் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோத வேண்டும். எப்படியும் வென்று விடுவோம் என்கிற நம்பிக்கையில் தத்தம் அதனதன் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
























