‘manike mahe hithe’ என்கிற ஆல்பம் பாடல் மூலம் பிரபலமான சிங்களப் பாடகி யோஹானி ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தமிழுக்கு அறிமுகமாக உள்ளார். இது பற்றிய அறிவிப்பை ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இலங்கையைச் சேர்ந்த பாடகியும், பாடலாசிரியருமானவர் யோஹானி. தனது யூ ட்யூப் சேனல் மூலம் தொடர்ச்சியாக பல ஆல்பம் பாடல்களைப் பாடி வந்தார். நான்கு மாதங்களுக்கு முன் அவர் வெளியிட்ட ‘manike mahe hithe’ என்கிற பாடல் யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு பெரிய வெற்றியைப் பெற்றது. தன் குரலின் வசீகரத்தில் கேட்கும் அனைவரையும் திரும்பத் திரும்பக் கேட்க வைத்தார் யோஹானி. அப்பாடல் இன்ஸ்டா ரீல்ஸில் ட்ரெண்டானது. பாலிவுட் பிரபலங்களும் அப்பாடலுக்கு ரீல்ஸ் செய்திருந்தார்கள். ஒரே பாட்டில் புகழின் உச்சம் தொட்டார் யோஹானி. அப்பாடல் இதுவரை 14 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில், அவர் தமிழுக்கு அறிமுகமாகவுள்ள தகவல் வெளியாகியிருக்கிறது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் ஹாரிஸோடு யோஹானி மற்றும் பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் உள்ள செல்ஃபி மூலம் அவர்கள் இணைந்து பணியாற்றுவது உறுதியாகியிருக்கிறது.
























