டெல்லி – சென்னை அணிகளுக்கிடையே நேற்று நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில் சென்னை அணி டெல்லியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தேர்வானது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள டெல்லி – சென்னை அணிகளுக்கான குவாலிஃபயர் 1 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெல்கிற அணி நேரடியாக இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகி விடும். தோற்கிற அணி குவாலிஃபயர் 2க்குத் தேர்வாகி அப்போட்டியில் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்.

இத்தகைய சூழலில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தது. அது சென்னை அணிக்கு சாதகமாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில், டெல்லி அணி சேஸிங்கில்தான் அதிகப் போட்டிகளில் வென்றிருக்கிறது. டெல்லி அணியில் முதலில் களமிறங்கிய ப்ரித்விஷா – ஷிகர் தவாண் கூட்டணியில் தவான் 7 ரன்களுக்கு அவுட் ஆக விக்கெட்டுகள் சடசடவென சரிந்தன. ஆனால் ப்ரித்வி ஷா நிதானமாக நின்று விளையாடி 60 ரன்கள் சேர்த்தார். அவருக்கடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 ரன்களும், ஹெட்மயர் 37 ரன்களும் எடுத்தார். விக்கெட்டுகள் சரிந்தாலும் முடிந்த வரை போராடி 172 ரன்களை சேர்த்தது டெல்லி அணி.
173 என்கிற இலக்கில் களமிறங்கிய சென்னை அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் – டூ ப்ளெசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிறனர். டூ ப்ளெசிஸ் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்க அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் நோர்ஜா பந்தில் போல்ட் ஆனார். மூன்றாவதாக ராபின் உத்தப்பா களம் இறக்கப்பட்டார். யாரும் எதிர்பாராத வண்ணம் உத்தப்பா அடித்து விளாசத் தொடங்கினார். கிரிகெட்டைப் பொறுத்த வரை ஒருவர் நல்ல ஃபார்மில் அடித்து விளையாடிக் கொண்டிருக்கும்போது மற்றவர் அவருக்கு சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுத்தால் மட்டுமே போதுமானது. கெய்க்வாட் அதனைத்தான் செய்தார். ஸ்ட்ரைக் ரொடேட் செய்து உத்தப்பாவுக்கு வாய்ப்புகளை வழங்கினார். 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து உத்தப்பா அவுட் ஆனார். நான்காவதாக ஷர்துல் தாக்கூர் களமிறக்கப்பட்டதையும் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ராயுடு 1 ரன்னிலும், மொயின் அலி 16 ரன்களிலும் அவுட் ஆக கெய்க்வாட் பொறுமையாக நின்று விளையாடியவர் 70 ரன்களில் அவுட் ஆனார். நேற்றைய போட்டியின் ஆகப்பெரிய மகிழ்ச்சி தோனியின் பெர்ஃபாமென்ஸ்தான். மொயின் அலிக்குப் பிறகு தோனி களமிறங்கும்போது ரசிகர்களுக்கு பக்கென்றுதான் இருந்தது. 13 ரன் ரேட் தேவைப்பட்ட நிலையில் தோனியால் இப்போது இருக்கும் ஃபார்முக்கு அதை நிகழ்த்த முடியுமா என்கிற கேள்வி இருந்தது. முதல் பந்தில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை என்றானதும் ரசிகர்களின் பதற்றம் கூடியது. அடுத்த பந்திலேயே சிக்ஸ் அடித்து அந்தப் பதற்றத்தைத் தணித்தார் தோனி. தோனி எதிர்கொண்ட 6 பந்துகளில் 1 சிக்ஸ், 3 ஃபோர்கள் என 18 ரன்களை விளாசினார். 19வது ஓவரின் நான்காவது பந்தில் அவர் விளாசிய ஃபோர் மூலமாக 173 டார்கெட்டை எட்டி 2 பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தோனி எப்போதுமே மேட்ச் ஃபினிஷர்தான் என ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சரியான பங்களிப்பை வழங்காததால் கடும் விமர்சனங்களைச் சந்தித்த தோனி அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
























