மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழித்திரைப்படங்களில் தன் தனித்துவம்மிக்க நடிப்பால் அனைவரது நினைவிலும் நிற்கும் நடிகர் நெடுமுடி வேணு மறைந்தார். 73 வயதான அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்னிந்திய சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயராக இருக்கும் நெடுமுடி வேணுவின் திரைப்பங்களிப்பு குறித்துப் பார்ப்போம்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நெடுமுடியில் பிறந்த கேசவன் வேணுகோபால் திரைத்துறைக்கு வந்த பிறகு ‘நெடுமுடி வேணு’ என்றே அழைக்கப்பட்டார். தமிழ் மக்களுக்கும் நன்கு பரிச்சயப்பட்ட நடிகரான நெடுமுடி வேணு மிகப்பெரும் மலையாள நடிகர். நெடுமுடி வேணு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது இந்தியன் பட சிபிஐ ஆபிசர் கதாப்பாத்திரமாகத்தான் இருக்கும். இந்தியன் திரைப்படத்தில் வேணுவுக்கு மிக முக்கியக் கதாப்பாத்திரம் வழங்கப்பட்டது. அக்கதாப்பாத்திரமும் லஞ்சம் உள்ளிட்ட அநீதிக்கு எதிரானதுதான் ஆனால் அதற்காக தனி மனிதர் எவரும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்கிற உறுதிகொண்டது. இந்தியன் கமல்ஹாசனை கைது செய்யும் வேணுதான், கமலை கொல்லத்திட்டமிடுகையில் காப்பாற்றவும் செய்வார். “நானும் உங்க ரசிகன்தான். ஆனா ஒரு அதிகாரியா பார்க்குறப்போ சட்டத்தை யாரும் கையில எடுக்கக்கூடாது. உங்களை சட்டத்தின் முன் நிறுத்துறது என் வேலை” என்று அவர் பேசும் வசனத்தை யாராலும் மறக்க முடியாது. நினைவில் நிற்கும்படியான அப்பாத்திரத்தின் வாயிலாக தமிழ் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்தார் நெடுமுடி வேணு. தொடர்ச்சியாக அந்நியன், பொய் சொல்லப் போறோம், சிலம்பாட்டம், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இன்னும் வெளியாகாத இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு நாடகங்களில் நடித்து வந்த வேணு, 1972ம் ஆண்டு வெளியான ’ஒரு சுந்தரியிடே கதா’ என்கிற மலையாளப்படம் மூலம் அறிமுகமானார். எக்கதாப்பாத்திரம் வழங்கப்பட்டாலும் அதற்குப் பொருந்துகிறவராகவும் அதன் தன்மையை உள்வாங்கி இயல்பான நடிப்பை வெளிப்படுத்துபவராகவும் வேணு தனது பங்களிப்பை செய்தார். அத்தகைய நடிப்பாற்றல் கொண்டவர்களின் வரிசையில் திலகனுக்கு அடுத்த இடம் நெடுமுடி வேணுவுக்குதான். 1990ம் ஆண்டு வெளியான His Highness Abdullah என்ற மலையாள திரைப்படத்திற்காக முதன்முறையாக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை வென்றார். மொத்தம் 3 தேசிய விருதுகள், 6 கேரள மாநில அரசு விருதுகள், ஃபிலிம் ஃபேர், ஆசியாநெட் விருது என பல விருதுகளை வாங்கிக் குவித்தவர் வேணு.
நடிப்பு மட்டுமின்றி திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் பங்களிப்பு செலுத்தியுள்ளார். திரைத்துறை மட்டுமின்றி சின்னத்திரையிலும் தன் மகத்தான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். 73 வயதாகும் வேணு இறுதி வரையிலும் நடிப்பை கைவிடவேயில்லை. அவரது இழப்பு குறிப்பாக மலையாள திரையுலகின் பேரிழப்பு. கலைஞனுக்கு என்றும் மரணம் இல்லை. தனது மகத்தான பங்களிப்பின் வழியாக அவர் நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருப்பார். அத்தகைய கலைஞன் கொரோனா பாதிப்புக்குள்ளாக்கி மீண்ட பிறகு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மறைந்திருக்கிறார். அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
























