நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவடந்த நிலையில் அரையிறுதிப் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடைபெறவிருக்கிறது.
ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி 20 புள்ளிகளோடு முதல் இடத்திலும், சென்னை அணி 18 புள்ளிகளோடு இரண்டாவது இடத்திலும் உள்ளன. இவ்விரு அணிகளுக்கான முதல் தகுதிச்சுற்று போட்டி இன்று இரவு 07.30 மணிக்குத் தொடங்குகிறது. இப்போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குச் சென்று விடும். தோற்கும் அணி, 3 மற்றும் 4 ஆகிய இடங்களில் உள்ள பெங்களூரு மற்றும் கொல்கத்தா மோதும் போட்டியில் வெல்லும் அணியுடன் மோத வேண்டும். ஆகவே இன்று நடைபெறவிருக்கும் போட்டி மிக முக்கியமானது.
இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி, சென்னை இரு அணிகளுமே போட்டி போட்டுக்கொண்டு நன்றாக விளையாடின. புள்ளிப்பட்டியலில் மாறிமாறி முதலிடத்தைப் பிடித்தன. அரையிறுதிக்கு முதலில் சென்னை அணியும் அடுத்ததாக டெல்லி அணியும் தேர்வாகின. அரையிறுதிக்குத் தேர்வான பிறகு நடைபெற்ற மூன்று போட்டிகளில் மூன்றிலுமே சென்னை அணி தோல்வியைச் சந்தித்தது. டெல்லி அணி இறுதியாக பெங்களூருவுடன் நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்றது. சென்னை அணி ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற புள்ளிப்பட்டியலில் கீழே உள்ள அணிகளோடு தோல்வியுற்றதால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ள்னர். டெல்லி அணி தொடக்கத்தில் இருந்தே நல்ல ஃபார்மில் விளையாடி வருகிறது. பெங்களூருவுடனான ஆட்டத்தில் கடைசிப்பந்தில்தான் பெங்களூரு அணி வென்றது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியுடன் சென்னை அணி இரண்டு போட்டிகளிலுமே தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆகவே, இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணி டெல்லியை வெல்லுமா? என்பது பெரும் கேள்வியாக மாறியிருக்கிறது. டெல்லி அணி பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே வலுவாக உள்ளது. சென்னை அணியும் அதற்கு சலித்ததில்லை என்பதைப் போல நல்ல திறமையாளர்களைக் கொண்டுள்ளது. ஆகவே இன்று நடைபெறும் போட்டி கடுமையான போட்டியாக இருக்கக்கூடும். சென்னை அணியைப் பொறுத்த வரை தொடக்க ஆட்டக்காரர்களான கெய்க்வாட் மற்றும் டூ ப்ளெசிஸ் இருவரும் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். பந்து வீச்சில் தீபக் சஹார் கடந்த சில போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை. எதிரணிக்கு ரன்களை வாரி வழங்கியது அவரது பந்து வீச்சு. தீபக் சஹார் அதிருப்தி அளித்தாலும் ஷர்துல் தாக்கூர் ஆறுதல் அளித்தார்.
இவ்விரு அணிகளின் பலம் என்னவெனில் ஆல்ரவுண்டர்களை அதிகம் கொண்டிருப்பதுதான். இரு அணிகளிலுமே 8 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 9வதாக இறங்கும் நபர் பேட்ஸ்மேனாக இருப்பார் என்கிற அளவு வீரர்கள் இரு அணியிலும் இருக்கிறார்கள். இரு அணிகளையும் ஒப்பிடுகையில் இரண்டுமே சம பலத்துடன் இருந்தாலும் கடைசியாக நடந்த 3 போட்டிகளில் சென்னை அணியின் பெர்ஃபாமன்ஸ் மோசமாக இருந்ததோடு, இரண்டு போட்டிகளிலும் டெல்லி அணியிடம் சென்னை தோல்வியுற்றிருப்பதால் சென்னை வெல்வதற்கான வாய்ப்பு சற்று குறைந்த அளவில் இருக்கிறது.
விளையாட்டைப் பொறுத்த வரை யூகங்கள் அத்தனையும் தவிடுபொடியாகக்கூடும் என்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எந்த அணி தோற்றாலும் அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியது.
























