ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் கடைசி நாளான இன்று ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுக்கான போட்டிகள் இன்றோடு நிறைவடைகின்றன. இன்று மும்பை – ஹைதராபாத் அணிகளும், டெல்லி – பெங்களூரு அணிகளும் மோதுகின்றன. இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் இந்த இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் இரவு 07.30க்கு நடைபெறுகிறது.
இன்று நடைபெறவிருக்கும் போட்டிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பில் எந்தப் பெரிய மாறுதலையும் ஏற்படுத்தப் போவதில்லை. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல நான்காவது இடத்துக்கு மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் ராஜஸ்தானுடன் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு அதிக ரன் ரேட்டில் உள்ளது. இன்று ஹைதராபாத் அணியுடன் மும்பை அணி மோதி வெற்றி பெற்றால் கொல்கத்தாவுக்கு நிகரான 14 புள்ளிகளைப் பெறும். ஆனால், கொல்கத்தாவின் ரன் ரேட்டை மிஞ்சுவதற்கான வாய்ப்பு அரிதினும் அரிது.
டெல்லி – பெங்களூரு இடையிலான போட்டியில் டெல்லி வெற்றி பெறுமேயானால் எத்தகைய விளைவுகளும் ஏற்படப்போவதில்லை. ஏனென்றால் டெல்லி வென்றாலும் தோற்றாலும் அதே முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். பெங்களூரு வென்றால் சென்னை அணிக்கு நிகரான 18 புள்ளிகளைப் பெறும். ஆனால் ரன் ரேட் அடிப்படையில் சென்னை இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். மிகப்பெரும் ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தினால் மட்டுமே பெங்களூரு அணியால் இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடியும்.
குவாலிஃபயருக்கான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.
























